உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமி சிலை நிமிர்ந்தால் கண்மாய் பெருகும்: கிராமத்தினர் நம்பிக்கை

சாமி சிலை நிமிர்ந்தால் கண்மாய் பெருகும்: கிராமத்தினர் நம்பிக்கை

திருப்புத்துார்,: திருப்புத்துார் அருகே கண்ணமங்கலப்பட்டி கிராமத்தினர்கண்மாயில் உள்ள பழமையான சிலையை நிமிர்த்தி வைத்தால் கண்மாய் பெருகும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கல்லல் ஒன்றியம் மேலப்பட்டமங்களம் ஊராட்சியைச் சேர்ந்தது கண்ணமங்கலப்பட்டி கிராமம். இந்த கிராமத்திலுள்ள கண்மாயில் கரையை ஒட்டி தண்ணீருக்குள் ஒரு பழமையான சிலை காணப்படுகிறது. ஒரே கல்லில் முன்புறத்தோற்றம் ஆடவர் வடிவில் வடிக்கப்பட்டுள்ளது.

இருகைகளில் ஆயுதங்களுடன் நின்ற தோற்றத்தில்உள்ளது. இடையில் வஸ்திரமும் கழுத்தில் அணிகலனும் உள்ளது. முகத் தோற்றம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுமார் 5 அடி உயரம் 2.5 அடி அகலமுள்ள அந்த சிற்ப பலகை இரண்டு அடி சேற்றில் புதைந்து காணப்படுகிறது. இது குறித்து அக்கிராமத்தினரிடம் கேட்ட போது, எங்கள் முன்னோர் காலத்திலிருந்து இந்த சிலை கண்மாயில் உள்ளது. இதை வேறு எங்கும் அகற்ற முடியவில்லை. ஒரு முறை இதை இயந்திரம் மூலம் அகற்றிய போது, அந்த டிரைவர் விபத்துக்குள்ளானார். மீண்டும் உடனடியாக அந்த சிலையை கண்மாய்க்குள் வைத்து விட்டனர். எந்த பூஜையும் செய்வதில்லை. பூ சூட்டுவது, சந்தனம்,குங்குமம் கூட வைப்பதில்லை. காராளன் காலத்திய இந்த சிலை கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் சாய்ந்து கிடந்தால், அதை நிமிர்த்தி வைப்போம். சில நாட்களில் மழை பெய்து நீர்வரத்து ஏற்படும். அதிகபட்சமாக சிலை உயரத்திற்கே நீர் பெருகும். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாய்ந்து கிடந்த இந்த சிலையை நிமிர்த்தி வைத்தோம். இப்போது மழை பெய்து கண்மாய்க்கு நீர் வந்து விட்டது என்கின்றனர் நம்பிக்கையுடன்.

பல நுாற்றாண்டு பழமையான அந்த சிலை அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. இயற்கையும் அதை ஏற்பதால் கிராமத்தினருக்கு சந்தோஷம் தான்.பொதுவாக சிவகங்கை மாவட்டப் பகுதியில் உள்ள கோட்டைச்சுவர், பழங்கிணறுகள் போன்றவற்றை காராளன் காலத்தியவை என்றே பலரும் கூறுகின்றனர். சிலப்பதிகாரத்திலும் காராளர் எனப்பட்டோர் நீர்வளத்தை ஆள்வோர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உழவின் செயல்பாட்டு அம்சங்களைத் தீர்மானிக்கிற முதன்மை விவசாயிகளாக காராளர் உருவானதாக சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. எனவே இக்கிராமத்தினர் நம்பிக்கைக் கொண்டுள்ள சிலையும் நீர்நிலைகளில் வைக்கப்படும் காராளர் காலத்திய சிலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !