உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

மேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

நல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மேஷ ராசி அன்பர்களே!சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து இடர்பாடுகளை தந்திருப்பார்.  குடும்பத்தில் கருத்து வேறுபாடு வந்திருக்கலாம்.  உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம்.  முயற்சியில் தடை குறுக்கிட்டு, நினைத்தது முடியாமல் போய் இருக்கலாம். இந்நிலையில்  9-ம் இடமான தனுசு ராசிக்கு சனிபகவான் வருகிறார்.  இதனால் கெடுபலன் குறையும்.   அவரது 3,7,10ம் பார்வையால் நன்மை கிடைக்கும்.  காலம் கனிந்து வளர்ச்சிக்கான கதவு திறக்கும். 2018 ஜனவரி –  2019 பிப்ரவரி எந்த பிரச்னை வந்தாலும் அதை குருவாலும், சனிபகவானின் பார்வையாலும் எளிதில் முறியடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மிக உறுதுணையாக  இருப்பர். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.  பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி பெருகும். திருமணம், கிரகபிரவேசம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும்.  கடந்த காலத்தில் இருந்த வேலை பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்தால் கிடைக்கும். வியாபாரத்தில் சனி பகவானின் 7-ம் இடத்துப்  பார்வையால் லாபம் அதிகரிக்கும்.  உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவர்.  அரசு வகையில் இருந்த பிரச்னை மறையும்.  தொழில், வியாபாரத்தில் சனியால் மறைமுகப்போட்டி குறுக்கிட்டாலும், அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். சனிபகவானின் 10ம் இடத்துப் பார்வையால் சிலர் வியாபார விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்து ஓங்கும். கலைஞர்கள் நல்ல புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். மாணவர்களுக்கு தேக்க நிலை மாறும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் மனநிம்மதியுடன் இருப்பர். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும்.  உடல்நலன் அதிருப்தி அளிக்கலாம். அக்கறை தேவை.  2019 மார்ச் – 2020  மார்ச் கேது 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல.ஆனால் அவரால் இருந்த உடல் உபாதை நீங்கும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, முயற்சியில் தடை ஏற்படலாம். ராகு 3-ம் இடத்திற்கு மாறுவது சாதகமான பலன் தரும். செயலில் வெற்றி, பொருளாதார வளம் பெருகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருபகவான் 2019 அக். 27-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். அப்போது நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவி ருக்காது. சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வையால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சகதொழிலதிபர்களின் மத்தியில் உங்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்களால் அவ்வப்போது பணிச்சுமைக்கு ஆளாகலாம்.  அக்டோபருக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.  வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி மறையும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற  முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர்.  மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.  சிரத்தை எடுத்து படித்தால் தேர்வில் சாதனை படைக்க முடியும்.  விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நெல், கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களின் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு தோழிகள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். சற்று பொறுமை தேவை. கேதுவால் ஏற்பட்ட  உஷ்ணம், தோல், தொடர்பான நோய் பூரண குணம் அடையும்.பயணத்தின் போது கவனம் தேவை.2020 ஏப்ரல் –  டிசம்பர் இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு சென்று விட்டாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.  பணநஷ்டம், மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. ராகு இதுவரை 3-ம் இடத்தில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் 2020 ஆக. 31-ல் 2-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பானதல்ல. அவர் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம். இதுவரை சாதகமற்ற இடத்தில் இருந்த கேது, 2020 ஆக. 31-ல்  8-ம் இடத்திற்கு வருவதும் நல்லதல்ல. அவரால் வாழ்வில் சிரமம் குறுக்கிடும்.  தொழில், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனைவி பெயரில் உள்ள தொழில் நல்லவளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமைக்கு உரிய மதிப்பு, பாராட்டு தற்போது இல்லாமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வையால் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற, விடாமுயற்சி அவசியம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்ப்பு இன்றி உழைக்க நேரிடும். மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.  ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  விவசாயிகள் மானாவாரி பயிர்களின் மூலம் வருமானம் காணலாம். வழக்கு விவகார த்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடித்து, குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ண, பித்தம், சளி போன்ற உபாதை ஏற்படலாம்.பரிகாரப்பாடல்:அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று, ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்பரிகாரம்:● வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு● சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்● சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !