சோளிங்கர் நரசிம்மரை விரைவில் ரோப்காரில் சென்று தரிசிக்கலாம்!
சோளிங்கர்: அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், சோளிங்கர் பெரிய மலைக்கு, ரோப்காரில் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும்’ என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். வேலூர் மாவட்டம், சோளிங்கர் பெரிய மலையில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, 1,336 படிகள் ஏறிச் சென்று, பெரிய மலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்ய முடியும். நடக்க முடியாத பக்தர்களுக்கு, மலையடிவாரத்தில் டோலி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மலைக்கு சாலை அமைக்க, முன்னாள் எம்.எல்.ஏ., கோபால் முயற்சி செய்தார். ஆனால் சாலை அமைப்பது கடினமானது என்பதால், இந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் வந்த எம்.எல்.ஏ.,க்கள் அருள் அன்பரசு, பார்த்திபன் ஆகியோர், ரோப்கார் அமைக்க தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில், ரோப்கார் அமைக்க, 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்தறை வேலூர் மண்டல இணை ஆணையர் அசோக்குமார், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் துணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் பெரிய மலைக்கு சென்று வர, 750 மீட்டர் உயரத்திற்கு, 9.50 கோடி ரூபாய் செலவில் ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்து, செயல்பாட்டுக்கு வரும். அதன் பின், பக்தர்கள், 1,336 படிகள் உள்ள இந்த மலைக்கு ரோப்காரில் சென்று வரலாம். இதில், நான்கு பெட்டிகள் கொண்ட, நான்கு ரோப்கார்கள் இயக்கப்படும். இரண்டு வண்டிகள் மேலே செல்லும் போது, இரண்டு வண்டிகள் கீழே வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேலூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, 3,000 பெரிய கோவில்களில், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் வைக்கப்பட்டுள்ளன. சிறிய கோவில்களிலும் இந்த வசதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.