ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடை மாலை, வெண்ணெய் சாற்றி தரிசனம் செய்தனர். மார்கழி மூல நட்சத்திரம், அமாவாசை தினத்தில் அனுமன் பிறந்தார். அவரது பிறந்த தினமான நேற்று அனுமன் கோயில்களில் அனுமனுக்கு வடை மாலை, வெண்ணெய் சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அரண்மனை பால ஆஞ்சநேயர் கோயிலில், காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 10:30 மணிக்கு தீபாராதனை, 11:௦௦ மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரு தினங்களில் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளதால், சனியின் பார்வையில் சிக்கும் ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டால், சனி பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்பதால், அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அர்ச்சகர் ராமகிருஷ்ணன், சுவாமி அலங்காரம்,, அபிேஷகத்தினை நடத்தினார். சேதுக்கரைசேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பக்தர்கள் வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபட்டனர். பட்டினம்காத்தான் கடற்கரை சாலையில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர், திருப்புல்லாணி, தேவிபட்டினம், மண்டபம்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், பரமக்குடி, உட்பட அனைத்துப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.