குச்சனூரில் சனிப்பெயர்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று சனி பகவான் பெயர்ச்சியானார். அதையொட்டி குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் டிச. 9ல் லட்சார்ச்சனையுடன் துவங்கின. நேற்று காலை 9:59 மணிக்கு சுயம்பு மூலவருக்கு மகா தீபம் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் பிரமாண்டமான மூன்று எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டன.இந்தாண்டு உற்சவருக்கு கணபதி சன்னதி அருகே மேடை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். வி.ஐ.பி.,கள் அங்கு அமர வைக்கப்பட்டதால், பக்தர்கள் மூலவரை சிக்கலின்றி தரிசித்து சென்றனர். மூலவருக்கு மகாதீபம் காட்டியபோது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.