திருப்புத்தூரில், புறக்கணிக்கப்படும் ஆன்மிக தலங்கள் அவதிக்குள்ளாகும் சுற்றுலா பயணிகள்
திருப்புத்தூர்:- திருப்புத்தூர் பகுதியில் நடைபெறும் விழாக்களில் போதிய அடிப்படை வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் தொலை தூரங்களிலிருந்து வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. திருப்புத்தூர் பகுதி புராண, வரலாறு சிறப்பு மிக்க ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதியாகும்.
பிள்ளையார்பட்டி,குன்றக்குடி, என்.வைரவன்பட்டி, திருப்புத்தூர், பட்டமங்கலம்,பெரிச்சி கோயில், தி.வைரவன்பட்டி, திருக்கோஷ்டியூர் என்று பல கோயில்கள் கொண்ட ஊர்கள்.
அதனால் விசேஷ நாட்களில் இங்கு எதிர்பாராத அளவிற்கு பக்தர்கள் வருகை அதிகரித்து விடும். ஆனால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில்லை.
உதாரணமாக திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவில் கடைசி நான்கு நாட்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் அதற்கான ஏற் பாடுகள் சில நாட்களுக்கு முன்பாக திட்டமிடப்பட்டு , ஏனோ தானோ என்ற அளவில் நடந்து பக்தர்கள் அவதியுடன் முடிந்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. அது போலவே அண்மையில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவிற்கு பட்டமங்கலத்தில் பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. தற்போது பெரிச்சி கோயில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.
போதிய பாதுகாப்பின்றி சாலை முழுவதும் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்பட்டது. பெயரள விலேயே போலீசார் காணப்பட்டனர். அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப் படவில்லை.கோயில் நிர்வாகத்தினர் கூட்டத்தைச் சரியாக கணிக்காததும், அரசு அதிகாரிகளுடன் சரியான தொடர்பு இல்லாததும்,உள்ளாட்சி நிர்வாகங்கள் நிதிநிலையும், அடிப்படை வசதிக்கான நிதிப்பற்றாக் குறையுமே இந்த குறைபாட்டிற்கான காரணமாகி விடுகிறது.
இது போன்ற பெரிய கூட்டங்களை ஈர்க்கும் ஆன்மிக விழாக்களின் போது கூடும் பொதுமக்க ளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறை,மருத்துவ,போக்குவரத்து,பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கவேண்டியது அவசியமாகும். விழாக்காலங்களில் கூடும் பக்தர்களை ஈர்ப்பதால் பயணிகளின் வருகை தொடரும்.அதன் மூலம் சுற்றுலாத்தொழில் மாவட்டத்தில் வளர்ச்சி பெறும்.
இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு கோயில் தரப்பில் நிழற் கூடம், அன்னதானம், கட்டணமில்லா தரிசனம், அனைவருக்கும் சம மரியாதை அரசு தரப்பில் நல்ல சாலை வசதி, பஸ் ஸ்டாண்ட்,பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவதால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் அனைவரும் சாமி தரிசனம், அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைத்து பாது காப்புடன் பக்தர்கள் வந்து செல்ல முடிகிறது.
இதனால் இந்த குக்கிராமம் கடந்த 20 ஆண்டுகளில் ஆன்மிகஉலகில்பிரபலமடைந்து உள்ளது. இதனால் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்று மற்ற ஆன்மிக தலங்களும் வளர்ச்சி பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.