கணபதிபாளையம் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பல்லடம் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கணபதிபாளையத்தில் உள்ள கால பைரவருக்கு, நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி நாளில், பக்தர்கள் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். அந்நாளில் பூசணியில் தீபம் ஏற்றி, கோவிலை வலம் வந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தில் உள்ள, ஸ்ரீவடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று மதியம், 3.00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு வேள்வியும், தொடர்ந்து, பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது.இரவு, 7.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.