திருமலையில் ரதசப்தமி விழா: ஒரு நாள் பிரம்மோற்சவம் கோலாகலம்
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர நிகழ்வில் முக்கியமான விழாவான ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர நிகழ்வில் முக்கியமான விழா ரதசப்தமி விழாவாகும். பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும் விதவிதமான வாகனங்களில் வலம் வரும் சீனிவாசப்பெருமாள் ரத சப்தமி என்று அழைக்கப்படும் நாளன்று அனைத்து வாகனங்களிலும் காலை முதல் இரவு வரை வலம் வருவதால் அன்றைய தினத்தை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்றும் மினி பிரம்மோற்சவம் என்றும் அழைப்பர்.
இந்த ஒரு நாள் பிரம்மோற்சவம் இன்று ( 24/01/2018) அதிகாலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வலம் வருவதுடன் துவங்கி சின்ன சேஷ வாகனம்,கரூட வாகனம் என்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இரவு சந்திர பிரபை வாகன உலாவுடன் நிறைவு பெறும். விழாவினை முன்னிட்டு திரளான பக்தர்கள் மலைமீது திரண்டுள்ளனர் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் உள்ளீட்ட தேவைகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.