சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள்: வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில்..
சிவ பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், அடுத்தடுத்து தீ விபத்து நடைபெற்று வருவதற்கு, ஆகம விதி மீறல் காரணம் என, சிவ பக்தர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். சிவ பெருமான் ஆடல் வல்லானாக, திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் -பொற்சபை, மதுரை- வெள்ளி சபை, திருநெல்வேலி -தாமிர சபை, திருக்குற்றாலம் -சித்திர சபையில் காட்சி தருகிறார். வெள்ளி சபையான, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, வீரவசந்தராயர் மண்டபத்தில், கடந்த, 2ம் தேதி, தீ விபத்து ஏற்பட்டது. இதில், வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள், மண்டப சுவர்கள் சேதம் அடைந்தன.
காரணம்: அந்த பாதிப்பின் சோகம் மறைவதற்குள், சிவபெருமான் முதல் திருநடனம் புரிந்த இடமாக கருதப்படும், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள, 500 ஆண்டுகளுக்கு மேலான, ஸ்தல விருட்சமான ஆலமரம் எரிந்தது. மரத்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்ததால், மரம் பாதிஅளவு நாசமானது. எனினும், மரத்தின் மேல் பகுதியில் இன்னமும் பச்சை உள்ளது. இந்த விபத்திற்கு, கோவில் நிர்வாகத்தினர் ஆகம விதிகளை மீறியதே காரணம் என, பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு செய்தனர்: இந்த கோவிலில், கடந்த மாதம் நடந்த ஆருத்ரா அபிஷேகத்திற்காக, கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்து, ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு, பக்தர்கள் எளிதாக வரும் வகையில், கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது என, பக்தர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் உத்தரவின் படி, பாதை அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு பரிகாரமாக, பூஜை எதுவும் நடத்தப்படவில்லை. அதனால் தான், விருட்சம் எரிந்துள்ளது என, சிவ பக்தர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், திருத்தணி கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவிலுக்கு நேற்று சென்று, எரிந்த ஆலமரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
பரிகார பூஜை: கோவில் ஆலமரம் எரிந்ததை அடுத்து, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் குருக்கள் சபாரத்தினம் தலைமையில் அர்ச்சகர்கள், பரிகார பூஜைகள் நடத்தினர். பின், காலை, 6:00 மணிக்கு, வழக்கம் போல் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.