முனிவர்கள் வழிபாட்டுக்கு கட்டியகரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்
தமிழகத்திலுள்ள பழமையான கோவில்களில் ஒன்று, பொள்ளாச்சி அடுத்துள்ள கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில். காவடிக்கா எனும் நாட்டில், அமைந்திருக்கும் காரைப்பாடியே பின்னாளில் கரப்பாடியானது. கி.பி., 983 ஆண்டுக்கு முன், அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில், சமண முனிவர்கள் வழிபாட்டுக்காக, சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகிறது. கோவில் அமைப்பில் மூலக்கருவறை, வசந்த மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன முற்றிலும் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. பலகை கற்களால் மேற்கூரை அமைத்து, அதன்மேல் கோபுரத்துடன் கூடிய மூலக்கருவறையில், இரண்டடி உயர மேடையில் சிவன், விஷ்ணு, பிரம்மா சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில், விநாயகர் சன்னதி இடது பக்கத்திலும், வலது பக்கத்தில் சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வெளிப்பகுதியில், ஒன்பது துாண்களில், அன்னம், மயில் மேல் முருகன், யானை, குரங்கு, கர்ப்பிணி பெண் மற்றும் முனிவர்களின் உருவங்கள் அழகிய, நுட்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இத்துாண்களில், தற்போது, நான்கு மட்டும் முன் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சில துாண்கள் சிதிலமடைந்துள்ளன. கோவிலுக்கு பக்கவாட்டில், பசுமாட்டில் சாய்ந்தபடி பெண் சிலையை, துர்க்கையம்மனாக மக்கள் வழிபடுகின்றனர். கோவில் கோபுரம், மற்றும் சுற்றுச்சுவர்களில், கோவில் வரலாறு, ஆட்சி செய்த மன்னர்கள், திருப்பணிக்கு உதவியவர்கள் பெயர்கள் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலை ஒட்டி, கரப்பாடி குளத்தில் இருந்து வெளியேறும் நீர், இக்கோவிலை ஒட்டி தீர்த்த குளமாக இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். கல்வெட்டிலும் இத்தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோவில் முன்பாக நந்தி சிலையும், 15 அடி உயரமுள்ள கொடிக்கம்பமும் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தினசரி பூஜைகள் நடக்கின்றன. பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிேஷகம், வியாழக்கிழமைகளில் குரு, துர்க்கை சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள், தடையின்றி திருமணம் நடக்க வேண்டும், திருமண வரன் அமைய வேண்டும், குழந்தைபேறு வேண்டியும் வழிபடுகின்றனர். மனமுருகி வேண்டுவோர் நினைத்து காரியம் கைகூடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.மூலனுார், கொல்லபட்டி, விருகல்பட்டி, காளியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கோவிலுக்கு சொந்தமாக, 200 ஏக்கர் நிலம் உள்ளது.