உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மாசிமக விழா: 3 வைணவத் தலங்களில் கொடியேற்றம்

கும்பகோணம் மாசிமக விழா: 3 வைணவத் தலங்களில் கொடியேற்றம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி, மூன்று வைணவத் தலங்களில் இன்று கொடியற்றத்துடன் விழா துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக சக்கரபாணி சுவாமி கோவில் திகழ்கிறது.

சிறப்புமிக்க இவ்வாலயத்தில் மாசிமகத்திருவிழாவையொட்டி இன்று கொடிமரம் அருகே சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளினார். அப்போது கொடிமரத்திற்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 24ம்தேதி காலையில் பல்லக்கிலும், இரவு கருடசேவையும் நடைபெறுகிறது. 25ம்தேதி காலையில் பல்லக்கிலும், இரவு அனுமந்தவாகனத்திலும் வீதியுலா நடைபெற உள்ளது. வருகிற 1ம்தேதி அதிகாலை 4.30மணிக்குள் மாசிமகத்தை  முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதே போல ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !