உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்

கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்

நாட்டரசன்கோட்டை, நாட்டரசன்கோட்டையில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் மாசித்திருவிழா துவங்கியுள்ளது. வரும் பிப்., 26 ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ளது சிவகாமியம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயில். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் சுவாமி, அம்மனுக்கு தீபாராதனைகளும், வீதிஉலாவும், யாகசாலை பூஜைகளும், நாதஸ்வர நிகழ்ச்சியும், வேதபாராயணமும் நடைபெறுகிறது.

விழாவில் 6 ம் நாளான வரும் பிப்., 26 ல் பகல் 12:00 மணியளவில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைக்காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரவுள்ளனர். இரவில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறுகிறது. கடைசி நாளான வரும் மார்ச் 3 ல் தீர்த்தவாரியுடன் எஜமான உற்சவமும், இரவு 7:15 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நாட்டரசன்கோட்டை பகுதி கண்காணிப்பாளர் கணபதிராமன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் ஆவிச்சி செட்டியார் தரப்பினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !