புத்தாண்டு ஸ்பெஷல் 2012
கர்நாடக கன்னியாகுமரி
கர்நாடகா, தர்மஸாலா நேத்திரவதி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மனநிம்மதி அளிக்கும் தலமாக
விளங்குகிறது.
தலவரலாறு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "குடுமபுரம் கிராமத் தலைவராக பரமண்ண ஹெக்டே இருந்தார். ஒருநாள் தெய்வீகத் தோற்றத்துடன் கூடிய சிலர் யானை, குதிரைகளில் அவர் வசித்த "நெல்லியாடிபீடு இல்லத்திற்கு வந்து குடிக்க தண்ணீர் கேட்டனர். தர்ம சிந்தனையுள்ள ஹெக்டே அவர்களை உபசரித்து பருகுவதற்கு நீர் தந்தார். அவரது செயலால் கவரப்பட்ட அவர்கள், ஹெக்டேயிடம், ""நாங்கள் இந்த இல்லத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறோம், நீங்கள் வேறு இடத்திற்கு போய் விடலாமா? என்று கேட்டனர். ஹெக்டேயும் தன் வீட்டை காலி செய்ய ஏற்பாடு செய்தார். அவரது தர்மசிந்தனை கண்டு மகிழ்ந்த அவர்கள்,""நாங்கள் மகேஸ்
வரனின் கட்டளைக்கு உட்பட்ட தர்மதேவதைகள். எங்களால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும். குடுமபுரத்தை புண்ணிய ஸ்தலமாக மாற்றப்போகிறோம். நீங்கள் இங்கு கோயில் கட்டி, அதில் கன்னியாகுமரி பகவதி அம்மனை பிரதிஷ்டை செய்யுங்கள். மங்களுரூ அருகிலுள்ள கத்ரியில் உள்ள குளத்தில், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சுநாதேஸ்வரர் சிவலிங்கம் இருக்கிறது. அதை பகவதியம்மன் சந்நிதி அருகில் பிரதிஷ்டை செய்யுங்கள். இவர்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பக்தர்கள் செலு<த்தும் காணிக்கை மூலம் பெருந்தொகை சேரும். எங்கள் பிரதிநிதியாக நீங்கள் இருந்து அதை தர்ம காரியங்களுக்காகச் செலவிடுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், என்று கூறி மறைந்தனர்.
தர்ம தேவதைகளின் கட்டளைக் கிணங்க கன்னியாகுமரி அம்மனையும் மஞ்சுநாதேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்தார் ஹெக்டே. அங்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். காணிக்கையும் குவிந்தது. எனவே அத்தலம் "தர்ம ஸ்தலா எனப் பெயர் பெற்றது. பரமண்ண ஹெக்டேவுக்குப் பிறகு அவருடைய சந்ததியினர் தர்மஸ்தலா கோயிலை பராமரித்து வருகின்றனர். தற்போதைய தலைவராக வீரேந்திர ஹெக்டே உள்ளார்.
சிறப்பம்சம்: இந்தக் கோயிலில் தரிசனம், அர்ச்சனை, உணவு உள்ளிட்ட எதற்கும் பணம் கிடையாது. தங்குவதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு பாய், தலையணை, தனி அறை வழங்கப்படும். சாவியை ஒப்படைத்தவுடன் பணம் திருப்பி தரப்படும்.
தர்மதேவதை சந்நிதி: தர்மதேவதைகளின் பிரதிநிதியாக அன்னப்பசுவாமி அருள்பாலிக்கிறார். இங்குள்ள மஞ்சுநாத சுவாமியிடம் பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், பாகப் பிரிவினையில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நிலத்தகராறு உள்ளவர்கள், சாட்சி இல்லாமையால் நீதிமன்றங்களுக்குச் செல்ல
இயலாதவர்கள். "மஞ்சுநாத சுவாமி சந்நிதி தானிகே (என் வழக்கை நியாயமாக முடிக்க வேண்டியது <மஞ்சுநாத சுவாமியின் பொறுப்பு) என்று சொல்லி பிரார்த்திக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் அருகிலுள்ள நேத்திராவதி ஆற்றில் குளித்து ஒரு வாரம் தங்கி வழிபடுகிறார்கள். இவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது.
கோயில் அமைப்பு: கோயில் தோற்றம் ஒரு மடத்தைப் போல உள்ளது. ராமமணிவல்லி தாயார், சுப்பிரமணிய சுவாமி , தர்மதேவதை, இஷ்ட தேவதை சந்நிதிகள் உள்ளன. கன்னியாகுமரி அம்மன் சந்நிதியில் குமாரசுவாமி, கால ராகு எழுந்தருளியுள்ளனர். மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் சுவரில் லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர். அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
துலாபாரம் பிரார்த்தனை: துலாபாரபமாக அரிசி, வெல்லம், பழங்கள், தானியம் வழங்குவது சிறப்பாகும். வெள்ளி தேர் இழுப்பது, சரல்விளக்கு தீபமேற்றுதல், அன்னப்ப சுவாமி பாதத்திற்கு குங்கும அபிஷேகம் ஆகியவை இங்குள்ள வழிபாடுகள். இங்கு தரப்படும் தேங்காய் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்தால் திருஷ்டி கோளாறு நீங்கும்என்கின்றனர்.
ஹெக்டேயின் தீர்ப்பு: மஞ்சுநாத சுவாமியின் பிரதிநிதியான ஹெக்டே, இப்பகுதியில் நடக்கும் பிரச்னைகளை விசாரித்து சமரசப்படுத்துகிறார். கோயில் எதிரில் நந்தவனம், அபிஷேக தீர்த்தகுளம் உள்ளது. இத்தலத்தின் வருமானத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, முதியோர் இல்லம் இயங்குகின்றன.
திருமணங்கள் இலவசமாக நடத்தப்படுகிறது.
கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியர் ஆலயம்
புனித பிரான்சிஸ் சேவியர், ஸ்பெயின் நாட்டின் நவரா மாநிலத்திலுள்ள சேவியர் அரண்மனையில் 1506, ஏப்ரல் முதல் தேதி பிறந்தார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் 1537, ஜூன் 4ல், வெனீஸ் நகரில் குரு பட்டம் பெற்றார். போர்ச்சுக்கல் அரசர் திருத்தந்தை 3-ம் பவுலின் ஆலோசனைப்படி, 1542ல் இந்தியா வந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ள கோட்டார், மன்னர் காலத்தில் வேணாட்டின் தலைநகரமாக விளங்கியது. சிறந்த வியாபார
மையமான இங்கு ஏராளமான மக்கள் வசித்தனர். இங்கு வசித்த தோமையார் கிறிஸ்தவர்களில் பலரும் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் முறையான
மறைக்கல்வி பெற்றிருக்கவில்லை. இவர்களை சந்திப்பதற்காக சவேரியார் அடிக்கடி கோட்டார் வருவார். 1544ல்,திருவிதாங்கூர் ராஜ்யம் மீது மதுரை மன்னர்
படையெடுத்தார். திருவிதாங்கூர் மன்னருக்கு தைரியம் ஊட்டி போர்க்களம் சென்ற சவேரியார் ஒரு சிலுவையை <உயர்த்தி பிடித்தபடி, ""இறைவன் பெயரால் கட்டளையிடுகிறேன், ஒரு அடி முன்னெடுத்து வைக்கக்கூடாது, என்று கூறினார். அதை ஏற்று மதுரை மன்னரின் படையும் பின்வாங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த திருவிதாங்கூர் மன்னர் சவேரியாரை "மகாபிதா என்று அழைத்தார். சவேரியாருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதை கொடுக்க உத்தரவிட்டார்.
கத்தோலிக்க மதத்தில் மக்கள் சேருவதற்கு அவர் சுதந்திரம் அளித்தார். தற்போது சவேரியார் ஆலயம் அமைந்துள்ள இடத்தையும் தானமாக வழங்கினார். 1603ல், இங்கு ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. அது "மூவொரு கடவுள் ஆலயம் என்று அழைக்கப்பட்டது. (தந்தை, மகன், பரிசுத்தஆவி) இங்கு
சவேரியார் பெயரில் பல புதுமைகள் நடந்தது. கேட்டவர்களுக்கு கேட்ட வரமெல்லாம் கிடைத்தது.
1623ல் சவேரியாருக்கு புனிதர் பட்டம் கிடைத்த பின்னர், இந்த ஆலயம் கேட்ட வரம் தரும் புனித சவேரியார் ஆலயம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் களிமண் கட்டடம் அகற்றப்பட்டு கல் கட்டடம் கட்டப்பட்டது. கேரளாவில் கொல்லம் மறை மாவட்டத்தில் இணைந்திருந்த கோட்டார் 1930ல், தனி மறை மாவட்டமாக உருவானது. சவேரியார் ஆலயம் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை ஆலயமாக மாற்றப்பட்டது. இங்கு மத, இன பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி செல்கின்றனர். கேட்ட வரம் கிடைப்பதற்காக மக்கள் இங்கு உப்பு, நல்லமிளகு, மெழுகுவர்த்தி காணிக்கை செலுத்துகின்றனர். நவம்பர் கடைசியில் திருவிழா தொடங்கி டிசம்பர் மூன்றாம் தேதி நிறைவு பெறுகிறது.
இருப்பிடம்: நாகர்கோவில் வடசேரியில் இருந்து 2கி.மீ., பஸ் உள்ளது.
மெக்கா நகரின் இறை இல்லம்
சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவில், இறை இல்லமான கஅபா இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகருக்கு, சென்னையில் இருந்து செல்பவர்கள் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து செல்கிறார்கள். ஜித்தாவில் இருந்து மெக்காவுக்கு ரோடு வழியாக 70 கி.மீ., தூரம். மூன்று பிரிவாக உள்ள ரோட்டில் அதிக பட்சமாக 120 கி.மீ., வேகத்தில் செல்லலாம். மெதுவாக, மிதவேகமாக செல்ல தனி சாலைகள் உள்ளன. மலைகளால் சூழப்பட்டிருக்கிறது மெக்கா நகரம். எந்நேரமும் பயணிகள் வந்து சென்று கொண்டிருப்பபதால் 24 மணி நேரமும் ஓட்டல்கள், கடைகள் திறந்திருக்கும். ஆயிரக்கணக்கில் விடுதிகள் உள்ளன. இந்த நகருக்கு இன்னொரு பெயர் "உம்முல் குரா. "உம்முல் என்றால் "தாய். "குரா என்றால் "கிராமம். "கிராமங்களின் தாய் என்று இந்நகரை அழைப்பர். மெக்காவிலுள்ள கஅபா பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 8.20 லட்சம் பேர் தொழலாம். இதன் பரப்பளவு 3 லட்சத்து56 ஆயிரத்து 800 ச.கி.மீ., இப்ராஹிம் நபியால் கட்டப்பட்டது இந்த இறை
இல்லம். இது நீள் சதுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த இறை இல்லத்தின் மீது கருப்பு நிறத்தில் பட்டும், பருத்தியும் கலந்த துணியில் குர்ஆன் வசனங்கள், பொன் இழை வேலைப்பாடன் பொறிக்கப்பட்டு போர்த்தப்பட்டிருக்கிறது. இந்த துணியை "கிஸ்வா என்பர். ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் துணி
மாற்றப்படும்.
கஅபாவின் கிழக்கு மூலையில் "ஹஜர் அல் அஸ்வத் எனப்படும் கருப்புக்கல் பதிக்கப்பட்டிருக்கும். அரபு மொழியில் "அஸ்வத் என்றால் "கருப்பு. இந்த மூலையில் இருந்து தான் "தவாஃபின் எனப்படும் இடமிருந்து வலமாகச் சுற்றுதல் தொடங்கும். ஏழு சுற்றுகள் சுற்ற வேண்டும். ஆண்கள் மூன்று முறை வேகமாகவும், நான்கு முறை சாதாரணமாகவும் சுற்ற வேண்டும். பெண்கள் ஏழுமுறையும் சாதாரண வேகத்தில் சுற்றினால் போதும். இந்தக் கல்லை நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் முத்தமிட்டார் என்பதால், அவரைப் பின்பற்றுபவர்கள் இந்தக் கல்லை முத்தமிடுவதற்காக வரிசையில் நிற்பார்கள். ஆனால், இவ்வாறு முத்தமிட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ருக்ன் அல் அஸ்வத்தை ஒட்டி ("ருக்ன் என்றால் "மூலை) வடகிழக்காகச் செல்லும் சுவரில் அபாவின் வாசல் இருக்கிறது. வடமேற்காகச்
செல்லும் சுவரின் எதிரே சற்று தள்ளி அரை வட்ட வடிவத்தில், ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அரைவட்டச் சுவரின் <உள்ளே நின்று கஅபாவைத்
தொழுவதற்காக ஹாஜிகள் காத்திருப்பார்கள். அரை வட்ட சுவருக்கு கீழே தான் இஸ்மாயில் நபியும், அவர்களது தாயார் ஹாஜிராவும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்வர்.
மெக்காவில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் "மினா உள்ளது. நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் தனித்தனி பாதைகள் <உள்ளன. ஹஜ் நாட்களில் இங்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். 20 லட்சம் பேர் இங்கு தங்குவார்கள். இங்கு ஹாஜிகளுக்கான குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன. மினாவின் எல்லையில் சிறிய, நடுத்தர, பெரிய ஷைத்தான்களின் குறியீடாக மூன்று கல்தூண்கள் உள்ளன. இவற்றின் மீது கல் எறிவது முக்கியமான செயல்களுள் ஒன்று. இங்கு நெரிசல் அதிகம் என்பதால், காவலர்கள் கூட்டத்தை பிரித்து பிரித்து அனுப்புவார்கள். மினாவில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் உள்ளது அரஃபாத். மினாவுக்கும், அரஃபாத்துக்கும் நடுவில், "முஸ்தலிஃபா இருக்கிறது. ஷைத்தான்கள் மீது எறிவதற்கான பொடிக் கற்கள் இந்நகரில் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
உண்மையே பேசுங்கள். இரக்கத்துடன் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
நேர்மையாக இருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் அல்லாமல் வரும் பணம், பொருள், ஆதரவை ஏற்காதீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
பிறர் நமக்கு செய்த நன்மைகளை நினைவில் வையுங்கள். தீமைகளை மறந்து விடுங்கள். அவர்களை மன்னியுங்கள்.
கோபத்தைக் குறையுங்கள். பொறுமை, அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை மட்டுமே உங்கள் பேச்சிலும், செயலிலும் ஜொலிக்கட்டும்.
சீட்டாட்டம், தீயவற்றைப் படித்தல், சினிமாவுக்கு போவதைத் தவிருங்கள். உங்கள் சாதனையைக் குறை கூறுபவர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களிடம் பழகாதீர்கள்.
ஒவ்வொரு மாதமும், உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதம் வரை தானம் செய்யுங்கள். உலகமே <உங்கள் குடும்பமாக இருக்கட்டும். தன்னலத்தை கைவிடுங்கள்.
வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள். ஆன்மிகக்
கூட்டங்களுக்கு ஏற்பாடும் செய்யுங்கள்.
இரவில் சீக்கிரம் உறங்கச் செல்லுங்கள். உறங்கும் முன் குடும்பத்துடன் கடவுளை வணங்குங்கள்.
அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து பணிகளைத் துவக்குங்கள்.
-சிவானந்தரின் புத்தாண்டு வாழ்த்து