சபரிமலையில் கொட்டும் மழையில் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
சபரிமலை : விடாது 15 மணி நேரம் பெய்த மழையிலும், நனைந்து கொண்டே சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மகரஜோதி உற்சவம் நடந்து வருகிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள், எதிர்பாராத வகையில் மழையில் மாட்டிக் கொண்டனர். நேற்று முன்தினம் துவங்கிய மழை 15 மணி நேரம் விடாது பெய்தது. ஆனால், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் இருந்து சபரி பீடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில், தமிழக பக்தர்களும் கணிசமான இருந்தனர். அதிக பக்தர்கள் திரண்டதால், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் அனுப்பப்பட்டனர். நேற்று முன் தினம் பலத்த மழை காரணமாக, சபரி பீடம் அருகே, பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததால், ஒரு மணி நேரம் பக்தர்கள் செல்வது தடைபட்டது.