பக்தர்கள் நோகும்படி குப்பைக்காடாகி வரும் திருவண்ணாமலை : நிரந்தர தீர்வு காணுமா அரசு?
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைக்கு, பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. பெருகிவரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கோவிலைச் சுற்றியும், மலையைச் சுற்றி கிரிவலம் செல்லும் பாதையிலும், போதுமான சுகாதார நடவடிக்கைள் காணோம். இதனால், திருவண்ணாமலை நகரின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பவுர்ணமி வந்துவிட்டாலே, திருவண்ணாமலை நகரம் இனி, குப்பையிலிருந்து எப்போது மீளும் என்று பயப்படும் அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. இனி வரும் காலத்தில், ஆன்மிக எண்ணம் மேலோங்குவதை விட, இங்கு வந்தால் துப்புரவு இன்மை மனதை வாட்டும் என்ற நிலை, வேகமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் நடந்த கார்த்திகை மகா தீபம், அடுத்த நாள் பவுர்ணமி வந்ததால், பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில், எப்போதும் இல்லாத வகையில் இருந்தது. கார்த்திகையன்று மட்டும், 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அடுத்த நாளும் மக்கள் வெள்ளம். மாதம் மாதம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தாலும், கூட்டத்திற்கு ஏற்ப, கோவிலைச் சுற்றி, போதுமான கழிப்பிட வசதி கிடையாது. இதனால், கோவிலைச் சுற்றி பல இடங்களில் பொதுமக்கள் சிறுநீர் கழித்து, ஒரே துர்நாற்றம் வீசியது.
எங்கும் குப்பை: கோவிலையொட்டியுள்ள நான்கு வீதிகளிலும் இந்த நிலை என்றால், நான்கு மாட வீதிகளில், அன்னதானம் வழங்குகிறோம் என்ற பெயரில், மாசுபடுத்தியிருந்தனர். பலரும் சாப்பிட்டுவிட்டு, காகித பிளேட், இலை மற்றும் தொன்னைகளை ஆங்காங்கே அப்படியே, சாலையோரத்தில் வீசியெறிந்து இருந்தனர். அதில், உணவுப் பொருட்கள் கழிவும் அதிகம். கோவிலைச் சுற்றி இந்த நிலை என்றால், ராஜகோபுரத்திலிருந்து கிரிவலம் செல்லும் பாதையில், குப்பை மீது தான் நடந்து செல்ல வேண்டியிருந்தது. மேலும், ராஜகோபுரத்திலிருந்து அக்னி தீர்த்தம் வரை சாலையில் ஆங்காங்கே, மேடு பள்ளங்கள் மற்றும் சிறு சிறு கற்கள், நடந்து
செல்வோர் பாதத்தைப் பதம் பார்த்தன. இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். செங்கம் பிரிவு சாலையில் இருந்து கிரிவலப் பாதை ஆரம்பமாகிறது. இப்பாதை முடியும் வரை, சாலையோரம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக, டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிரிவலம் செல்வோர் படுத்து உறங்குவதாலும், நடைபாதை வியாபாரிகள் கடைகளை வைத்திருப்பதாலும், அதில் நடப்பது சிரமம். பல இடங்களில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து போய் குழியாகி உள்ளது.
நடைபாதை கடைகள்: மேலும், கிரிவல பாதையில் அதிகமாக நடைபாதை கடைகள் உள்ளன. இவற்றில் குறிப்பாக, மக்காச்சோளம் மற்றும் இளநீர் விற்பவர்களால் குப்பைக் கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன. நடைபாதை கடைகள், அன்னதானம் வழங்குவது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் உணவுக் கழிவு மற்றும் தட்டுகளை உடனடியாக அகற்றுவதற்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள நடைமுறை தேவை. மேலும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் பெரும்பாலும், அரசு
போக்குவரத்துக் கழக பஸ்களில் தான் வருகின்றனர். இதற்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் பயணிகளிடமிருந்து டிக்கெட் கட்டணம் தவிர்த்து, டிக்கெட் வாங்குவதற்கு டோக்கன் என்ற பெயரில், 5 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு, லட்சக்கணக்கான ரூபாய் பணம் கிடைக்கிறது. இதில் ஒரு பகுதியைக் கூட, கிரிவல பாதை மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள குப்பையை, போர்க்கால அடிப்படையில் அகற்றுவதற்கு பயன்படுத்தலாம்.
தற்போதுள்ள நடைமுறையில், பவுர்ணமி முடிந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான், குப்பையை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. பவுர்ணமியையொட்டி சனி, ஞாயிறு விடுமுறையோ, அரசு பொது விடுமுறையோ வந்துவிட்டால், குப்பை
ஐந்தாறு நாட்கள் அள்ளப்படாமல், துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. கோவிலைச் சுற்றியும், கிரிவல பாதையில் கழிப்பிட வசதிகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியையும், கிரிவல பாதையையும் சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றியும், அதன் அவசியம் பற்றியும், பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் அதிகம் தேவை.
தனி அமைப்பு தேவை: இவை ஒருபுறம் இருக்க, தற்போது திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, சிதம்பரம் (ஆருத்திரா தரிசனம்), திருவாரூர் (ஆழித்தேரோட்டம்) போன்ற ஆன்மிகத் தலங்கள் ஆண்டுதோறும் மக்கள் நிரம்பி வழியும் இடங்களாக மாறிவிட்டன. தமிழக அரசு, பேரிடர் நிர்வாகத்திற்கு என்று தனித் துறை உள்ளது போல, இதற்கென ஒரு அமைப்பை உருவாக்கலாம். திருவண்ணாமலை போன்ற இடங்களில் மக்கள் கூடுவது, எந்த நாட்கள் என்பது முன்கூட்டியே எல்லாரும் அறிந்த விஷயம். அந்த நாள் வருவதற்கு முதல் நாளில் இருந்து, விழா முடியும் வரை, இக்குழு அங்கே முகாமிட வேண்டும். தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வசதியாக இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றுடன், துப்புரவுப் பணியில் முழுவீச்சுடன் இக்குழு ஈடுபடலாம். அந்தந்த நகராட்சி துப்புரவுத் துறை பணியாளர்களையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். இதனால், அங்கு வாழும் மக்கள் குப்பை பாதிப்பால் வரும் நோய்நொடிகள் மற்றும் அங்கு வந்து செல்லும் பயணிகள் அடையும் நோய் பாதிப்பு தடுக்கப்படும். அத்துடன், நகரின் தூய்மைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படும் போது, தமிழகமே தூய்மை மாநிலமாக மாறும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத்துவங்குவர். இதனால், அந்தந்த ஊர்களில் பொருளாதாரம் செழித்து, செல்வ வளம் பெருகும். பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்புரவும், தூய்மையும் இருக்கும் என்று உறுதி செய்வதன் மூலம், அதனால் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகளுக்கும் அங்கே வருபவர்கள், இயல்பாக எதிர்காலத்தில் ஒத்துழைப்பர். அதே சமயம், இப்பணி சிறக்க முன்கூட்டியே கிரிமினல்கள், ரவுடிகள் தலையிடாமலும் அல்லது கட்சி அரசியல் சாராத அமைப்பாக இந்த அமைப்பு செயல்பட வழிவகுக்க வேண்டும். அக்குழு அவ்வப்போது பயணம் செய்யவும், மக்கள் நலன் ஆரோக்கியத்துடன் அந்த இடத்தின் தூய்மையைக் காத்து பெருமையை அதிகரிக்க, தமிழக அரசு சில கோடிகள் ஒதுக்கி நடைமுறை உருவாக்கி உதவ வேண்டும். இக்கருத்து, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
- ரா.மணிவண்ணன்