உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கக் காசு பரிசு:திருச்சியில் புதிய திட்டம்

பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கக் காசு பரிசு:திருச்சியில் புதிய திட்டம்

திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், திருச்சி மாநகராட்சி கமிஷனர் கவர்ச்சியான அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:ஸ்ரீரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பேணுதல் மிகவும் அவசியமாகும். எனவே, அதிகளவு பிளாஸ்டிக் டீ கப், கேரி பேக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு வணிகர் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, வணிகர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா இணைந்து, ஜன., 4ம் தேதி முதல், 51 இடங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் மற்றும் குடிநீர் வினியோகத் தொட்டி வைக்கப்படுகிறது. இந்த, 51 இடங்களில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக் கொடுப்பவர்களுக்கு, இலவச பரிசு கூப்பன் வழங்கி, குலுக்கல் மூலம் பரிசுக்குரிய எண்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

முதல் பரிசாக, ஐந்து நபர்களுக்கு தங்கக் காசும், 2ம் பரிசாக, 21 நபர்களுக்கு வெள்ளிக் காசும், ஆறுதல் பரிசாக, எல்.இ.டி., பல்புகள் வழங்கப்படும்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !