கோவில் நிலங்கள் கண்டறியும் பணி: அறநிலையத்துறையினர் அதிதீவிரம்
திருப்பூர்; திருப்பூரில், கோவில் நிலங்கள் கண்டறிதல் குழு மூலம், நகரின் மையப் பகுதியான பாரப்பாளையம் பகுதியில், 2.75 ஏக்கர் நிலமும், வி.கள்ளிப்பாளையத்தில், 277 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து, அவற்றை மீட்கும் வகையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், கோவில் செயல் அலுவலர், சர்வே துறை அதிகாரிகளை கொண்ட, கோவில் நிலங்கள் கண்டறிதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில், இக்குழுவினரால், பல நுாறு ஏக்கர் கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, கருவம்பாளையம், பாரப்பாளையம் பகுதியில், 2.75 ஏக்கர் நிலம் உள்ளதாக ஆவணம் உள்ளது. அதன் அடிப்படையில், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நிலத்தை கண்டறிந்து, அளவீடு செய்தனர். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டது.
அதே போல், பல்லடம், வி.கள்ளிப்பாளையத்தில், காம்பிலியம்மன் கோவிலுக்கு சொந்தமாக, 277 ஏக்கர் நிலம் உள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாகவும், காற்றாலைகள் அமைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.கோவில் நிலங்கள் முழுமையாக ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்; நீதிமன்றம், உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, நிலங்கள் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக, கோவில் நிலம் குறித்து ஆய்வு செய்ய சென்ற அறநிலையத்துறை குழுவினரை முற்றுகையிட்டு, பாரப்பாளையம் பகுதி பொதுமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.