நாளை பங்குனி உத்திர திருவிழா : தென் மாவட்டங்களில் குவியும் பக்தர்கள்
திருநெல்வேலி: நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழ் மாதங்களில், கடைசியான பங்குனியும், நட்சத்திரத்தில், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் நாள், பங்குனி உத்திரமாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா, நாளை, 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தென் மாவட்டங்களில், பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு சிறப்பு மிக்கதாகும்.குலதெய்வம் கோவில் தெரியாதவர்கள், திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாரையே, குல தெய்வமாக கருதி, வழிபடுகின்றனர்.தவிர, சீவலப்பேரி மருகால்தலை சாஸ்தா, பிரான்சேரி கரையடி மாடசுவாமி சாஸ்தா, பாடகலிங்க சாஸ்தா, செங்கோடி சாஸ்தா என, 500க்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள், தென் மாவட்டங்களில் உள்ளன.தொழில், வேலை தொடர்பாக, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் வசிக்கும் இப்பகுதி மக்கள், பங்குனி உத்திரத்தன்று ஊருக்கு வந்து, குலதெய்வ சாஸ்தாவை வழிபடுகின்றனர்.குலதெய்வ வழிபாடு, கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது. பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒருசேர காணும் வாய்ப்பை, குலதெய்வ வழிபாடு ஏற்படுத்துகிறது.குலதெய்வ கோவில்களில், பூ கட்டி பார்த்து, சுப காரியங்களை முடிவு செய்வது, திருமண அழைப்பிதழை, உறவினர்களுக்கு வைக்கும் முன், குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு, முதல் அழைப்பாக வைப்பதும் வழக்கத்தில் உள்ளது.பங்குனி உத்திர விழாவுக்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், தென் மாவட்டங்களில் குவிந்து வருகின்றனர்.