விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா
விருதுநகர்:விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்டங்களில் பிரசிதிப்பெற்றது. விருதுநகர் , சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, செங்குன்றாபுரம், இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கோயில்களுக்கு பங்குனி பொங்கலையொட்டி பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க சொல்லி நேர்த்திக்கடன் செலுத்த வந்து கொண்டே இருப்பார்கள். அதிலும் பெண்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும்.
இக்கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்.1 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அம்மன் வாகனங்களில் விதியுலாவும் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது.கோயிலுக்கு முன்பு காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோயில் முன்பு உள்ள இடம் தேவேந்திரகுல வேளாளர் குலத்திற்கு சொந்தமானது.இக்குலத்தை சேர்ந்தவர்கள் கோயில் முன்பு பந்தல் போட்டு பொங்கல் வைக்க ஏற்பாடு செய்து கொடுப்பது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இது சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக இரவு அடுப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் விதியுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள். நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு முன் நாட்டுக்கோழி குழம்பு, கருவாட்டுக் குழம்பு , கொழுக்கட்டை என செய்து மண்சட்டியில் சமைத்து அம்மனுக்கு படைப்பார்கள். அதன்பின் விரதத்தை முடித்துவிட்டு கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.