உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடராஜர் சன்னதியில் திருவாதிரை திருநாளை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கஜபூஜையுடன் திரை விலகும் நிகழ்ச்சி நடந்தது. கணபதி பூஜை செய்து மூலாதாரம் திரையும், பிரம்மா, சரஸ்வதி பூஜையுடன் ஸ்வாதிஷ்டானம் திரையும், மகாவிஷ்ணு, லெட்சுமி பூஜை செய்து மணிபூரகம் திரையும், கவுரி ருத்ரன் பூஜை செய்து அணாகதம் திரையும், மகேஸ்வரன் பூஜை செய்து விசுத்தி மற்றும் சதாசிவம் பூஜை செய்து அஞ்ஞை திரைகளும் விலக்கப்பட்டது. தொடர்ந்து கோபூஜை, கன்னிகா பூஜையுடன் பரமேஸ்வரனுக்கு பூஜை செய்து சன்னதியில் உள்ள பெரிய திரை விலக்கப்பட்டு நடராஜர் ஆருத்ரா தரிசன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் ஓதுவார் மாணிக்கவாசகரின் பாடல்களைப்பாட சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மூன்றாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணிக்கு கோயில் நான்குரத வீதியில் சிதம்பரேஸ் வரர், சிவகாமி அம்பாள் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து சிவதீர்த்தத்தில் மாணிக்கவாசகர் தீர்த்த உற்சவம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பேஷ்கார் சந்திரன், ராதா மற்றும் கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !