சித்திரை கிருத்திகை விழா திருப்போரூரில் கோலாகலம்
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் சித்திரை கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வருகின்ற கிருத்திகை விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அது போல், நேற்று சித்திரை கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன. விழாவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தசுவாமி பெருமானின் திருவீதியுலா, மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.