மேட்டூர் அணை நந்தி சிலை : சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் பரப்பில் உள்ள நந்தி சிலையை காண, பஸ் வசதியின்றி, சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.மேட்டூர் அணை நீர்மட்டம், 56 அடியாக சரியும் போது, பண்ணவாடி நீர் பரப்பு பகுதி வறண்டு, ஜலகண்டேஸ்வரர் கோவிலின், 13 அடி உயர நந்தி சிலை முழுமையாக தெரியும்.தற்போது, நீர்மட்டம், 35.54 அடியாக சரிந்த நிலையில், வறண்ட நீர் பரப்பு பகுதியில், விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். அதன் மத்தியில், நந்தி சிலை காட்சியளிக்கிறது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணியர், சிலையை பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர். இதில், கார், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிலை அருகே வரை சென்று பார்வையிட முடியும்.பெரும்பாலான பயணியர், மேட்டூருக்கு பஸ்சில் வருகின்றனர். அங்கிருந்து, 20, கி.மீ.,யில் உள்ள பண்ணவாடி பரிசல் துறை வரை, நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் செல்லும் பயணியர், சிலையை காண, அங்கிருந்து, 1.5 கி.மீ., நடக்க வேண்டும். கொளுத்தும் வெயிலில், அவ்வளவு துாரம் நடப்பது சிரமம் என்பதால், வெகு துாரத்தில் இருந்து, சிலையை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.