உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வச்சிலை நல்லூரில் 16 முகம் கொண்ட சிவலிங்கம்

தெய்வச்சிலை நல்லூரில் 16 முகம் கொண்ட சிவலிங்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான காகபுஜண்டர் காலத்து 16 முகம் கொண்ட சிவலிங்கத்தை, தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கண்டறிந்துள்ளார். அவர் கூறியது: உத்திரகோசமங்கை அருகே தெய்வச்சிலை நல்லுார் கிராமத்தில், சிவன் பூர்ண புஷ்கலாதேவியுடன் சேர்ந்த அய்யனாரும் ஒரே கருவறையில் உள்ளனர். அய்யனாரும், 16 முகம் கொண்ட சிவனும் ருத்ராட்ச மரத்தை தலவிருட்சமாக கொண்டிருப்பது சிறப்பு என்றாலும், இங்கு சிவன் கோயில் மட்டுமே இருந்ததாக கருத முடிகிறது.

அய்யனார் மற்றும் 23 பரிவார மூர்த்தி சிலைகளை இடைக்காலத்தில் சேர்த்துள்ளனர். இங்குள்ள லிங்கம் ஆவுடை இல்லாமல் 16 முகங்களுடன் (பட்டை) உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முந்தையது. தாரலிங்கம் வகையை சேர்ந்தது. சிவனின் அருள் கிடைக்க காகபுஜண்டர் என்ற சித்தர் 16 ஆண்டு தவம் இருந்தார். அவரின் தவத்தை மெச்சி 16 முகங்களுடன்(தென் பொன்பரப்பியில்) இறைவன் காட்சியளித்ததாக புராணம் கூறுகிறது.உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமியை, பதஞ்சலி முனிவர், வியாசர், காகபுஜண்டர் போன்ற பல சித்தர்கள் தீர்த்தங்கள் அமைத்தும், சிலை பிரதிஷ்டை செய்தும் வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. காகபுஜண்டரும், தனக்கு காட்சியளித்த சிவனுக்கு தெய்வச்சிலை நல்லுாரில் 16 முகம் கொண்ட சிவலிங்கம் அமைத்து வழிபட்டு இருக்கலாம், என கருத முடிகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !