மழை பொழிய வேண்டி நந்தா விளக்கு வழிபாடு
பல்லடம்;மழை பொழிய வேண்டி, பல்லடம் வடுகபாளையம் பகுதி பொதுமக்கள், நந்தா விளக்கு ஏற்றி, மாகாளியம்மனை வழிபட்டனர். மழை பொழிவு குறைந்ததால், விவசாயம் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தில், மழை இன்மையால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மழை பொழிந்து, விவசாயம் செழிக்கவும், தொழில் முன்னேற்றம் அடையவும், பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் ஸ்ரீமாகாளியம்மன், துர்கையம்மன் கோவிலில், நந்தா தீபம் ஏற்றி வைத்து, பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று முதல், தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த வழிபாடு நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை பொதுமக்கள் மாகாளியம்மன் கோவிலில் ஒன்று கூடினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அணையாத நந்தா தீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: மழை பொழிந்து தண்ணீர் பற்றாக்குறை தீரவும், விவசாய தொழில் சிறக்கவும் வேண்டி, இந்த வழிபாட்டை நடத்துகிறோம். நந்தா தீபத்தை ஏற்றி, மூன்று நாட்கள் அம்மனை வழிபடுவோம். இதற்காக, பக்தர்கள் கோவிலிலேயே தங்கி, தீபத்தை மூன்று நாட்களும் அணையாமல் பார்த்து கொள்வர். மூன்றாவது நாள் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.