பாலாற்றில் இறங்கினார் முகையூர் கள்ளழகர்
முகையூர்:முகையூர், கள்ளழக பெருமாள், நேற்று, பாலாற்றில் இறங்கி, கோலாகல உற்சவம் கண்டார்.கூவத்துார் அடுத்த, முகையூரில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் அமைந்து, வட திருமாலிருஞ்சோலை யாக விளங்குகிறது. இங்கு வீற்றுள்ள கள்ளழக பெருமாள், சித்திரை பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் பாலாற்றில் இறங்கி, உற்சவம் காண்கிறார்.இந்நாளான நேற்று, அதிகாலை, அலங்கார சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பஜனை பாடல்கள் இசைமுழக்கத்துடன், கோவிலிலிருந்து புறப்பட்டு, கூவத்துார், ஆதிகேசவ பெருமாள் கோவில் சென்றார்.இங்கு, ஆண்டாள் சூடிய மாலையை, சுவாமிக்கு வழங்கி, சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, வாயலுார் பாலாற்றை அடைந்தார். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, ஆண்டாள் மாலையை சூடி, வேதபாராயணம், மங்கல இசை முழங்க, சுவாமி, ஆற்றில் இறங்கி கடந்தார்.வேப்பஞ்சேரி, கூவத்துார் வழியே, உலா சென்று கோவிலை அடைய, பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, உடன் சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.