’கோவிந்தா... கோபாலா...’ கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
போடி : போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி ’கோவிந்தா... கோபாலா... என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6:30 மணியளவில் இறங்கினார். அதன் பின் புதுார், நகராட்சி அலுவலகம் ரோடு, உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சி நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் செய்தனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
* உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜபெருமாள் முல்லையாற்றில் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்.* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில்,உற்ஸவர் வரதராஜர், கள்ளழகராக குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி,பச்சை திலகமிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, வடகரை நாயுடு மண்டபம், அழகர்சாமி புரம், யாதவர் திருமண மண்டபம், மீனாட்சியம்மன் கோயில் உட்பட வடகரை, தென்கரை பகுதிகளில் 40 இடங்களுக்கு சென்றார். மண்டகபடிதாரர்கள் அழகரை, கோலாகலமாக வரவேற்றனர். கள்ளழகர் புறப்பாடு செல்லும் இடங்களில், அழகர் வேஷமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் கண்ணன் கூறியதாவது: பச்சை பட்டு, பச்சை திலகமிட்டு அழகர் காட்சியளித்துள்ளார். இதனால் மழை பெய்து, பசுமை தலைதோங்கும், சகல ஐஸ்வர்யம் கிட்டும்,என்றார்.