பொங்கல் விழாவில் துடைப்பத்தால் அடித்து குதூகலம்
ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் துடைப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. மறவபட்டி முத்தாலம்மன் கோயில் விழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்தனர். காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் விழாவில் மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் முத்தாலம்மன் கோயில் முன்பு கூடுவர். அனைவரும் உடல் முழுவதும் சகதி பூசிக்கொண்டு கோயில் வளாகத்தில் விழுந்து வணங்கிய பின் துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வர். துடைப்பத்தால் அடிப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, குதுாகலத்தை வெளிப்படுத்துவர். அம்மன் முன்னிலையில் துடைப்பத்தால் அடித்துக் கொள்வதால், உறவு முறை பலப்படும் என்றும், கருத்து வேறுபாடுகள் மறையும் என்ற நம்பிக்கையுடன் கடந்த பல ஆண்டுகளாக இந்த நிகழ்வை தொடர்கின்றனர்.