திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் பூஜை
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, முகூர்த்தக்கால் பூஜை நேற்று நடந்தது. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, வரும், 21ம் தேதி, கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 22ம் தேதி, தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தினமும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 27ல், திருக்கல்யாண உற்சவம், 28ல் அதிகாலை சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. 28ல், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் 29ல், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. இதற்காக, பெருமாள் கோவில் வளாகத்திலுள்ள, தேர் நிலையில், கூடாரம் அகற்றப்பட்டு, தேர்கள் சுத்தம் செய்யப்பட்டன. நேற்று தேர் அலங்கரிக்கும் பணிக்காக, முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேருக்கு சிவாச்சார்யார்களும், பெருமாள் கோவில் தேருக்கு, பட்டாச்சார்யார்களும் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், தேர் அலங்கரிப்பு பணிகள் துவங்கின.