தாளவாடியில் குண்டம் விழா: 5,000 பக்தர்கள் தீ மிதித்தனர்
ADDED :2720 days ago
சத்தியமங்கலம்: தாளவாடி மலையரசி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழாவில், 5,000 பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள, கேர்மாளம் அருகே, கோட்டமாளம் மலையரசி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு குண்டம் விழா, கடந்த ஏப்.,24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மே, 1ல் கம்பம் நடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குன்றி, மாக்கம்பாளையம், கடம்பூர், பசுவனாபுரம் மற்றும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், ஊகியம், ஜல்லிபாளையம், கொள்ளேகால் பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கிடா வெட்டுதல் நடக்கிறது. வரும், 10ல் கம்பம் பிடுங்குதல், 15ல் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.