திருமண பெருமாள் கோவிலில் 27ல் மகா கும்பாபிஷேகம்
திருத்தணி: திருமலை திருமண பெருமாள் கோவிலின், மகா கும்பாபிஷேகம், 27ம் தேதி நடைபெறுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னத்துார் கிராமத்தில், புதிதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத திருமலை திருமண பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, இம்மாதம், 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக, 25ம் தேதி மாலை, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, முதல் கால யாக சாலை பூஜை, மறுநாள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலைx பூஜைகள் நடக்கின்றன. பின், 27ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை, 8:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் (கோபுரம்) மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இரவு உற்சவர் வீதியுலாவும் நாடகமும் நடைபெறும்.