ஆரூரா... தியாகேசா கோஷம் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
திருவாரூர் : திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், நேற்று (மே 27)ல், ஆரூரா, தியாகேசா கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.
திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந் தது.இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது என, திரு நாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர், ஆசியா விலேயே மிகப் பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம், 96 அடி; எடை, 350 டன். முன் புறம், தேரை இழுப்பது போல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன.
ஒவ்வொன்றும், 26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி, ஹைட்ராலிக் பிரேக் அமைத்துள்ளது.
சிறப்பு பூஜை :
கடந்த, 20ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தேருக்கு தியாகராஜர் எழுந்தருளினார். அன்று முதல், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.நேற்று (மே 27)ல் அதிகாலை, 4:00 மணிக்கு மேல், விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது.காலை, 6:30 மணிக்கு, கலெக்டர் நிர்மல்ராஜ், உணவு துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் வடம் பிடித்து, ஆழித் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆரூரா... தியாகேசா... கோஷங்கள் முழங்க, தேரை இழுத்தனர்.
தூறியது மழை :
தேரின் பின் சக்கரங்கள், புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்து, நிலையில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ் வரர் தேர்கள் இழுக்கப்பட்டன.ஆழித்தேர், மேல வீதிக்கு திரும்பும் போது, மழை தூறல் இருந்தது. இருப்பினும், தொடர்ந்து தேர் இழுக்கப்பட்டு, வடக்கு வீதி வழியாக, மாலை நிலையை அடைந்தது.