திருமண தடை நீக்கும் யாகம்: பால தண்டாயுதபாணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2700 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, திருமண தடை நீக்கும் யாகத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கெம்பநாயக்கன்பாளையம் டேம் சாலையில், பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம், 26ல் திருமண தடை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. நடப்பாண்டு யாகம், நடந்தது. தோஷங்கள் நீங்க பதிக பூஜை, பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருமணமாகாத ஆண்கள், பெண்கள், இதில் பங்கேற்றால் நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம், ருது தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகி, திருமணம் நடக்கும் என்று, கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். யாகத்தில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.