கரபுரநாதர் கோவிலில் உலக நன்மைக்காக ஏகாதச ருத்ர பாராயணம் சிறப்பு யாகம்
வீரபாண்டி: இந்தாண்டு நல்ல மழை பொழிந்து ஏரி, குளம் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டி, ஏகாதச ருத்ர பாராயணம் மற்றும் யாகம் கரபுரநாதர் கோவிலில் நடந்தது. சிவாலயங்களில், ஏகாதச ருத்ர பாராயணம் செய்தால், நாடு முழுவதும் நல்ல மழை பொழியும் என வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, ருத்ர ஜப பாராயணம், கணபதி, லட்சுமி, ருத்ர யாகங்கள், 11 கலச பூஜையுடன், 121 முறை ருத்ர மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது. ருத்ர யாகத்தில், 108 விதமான மூலிகைகள் சமர்ப்பித்து மதியம், 12:30 மணிக்கு பூர்ணாஹூதி செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீரை, மூலவர் கரபுரநாதருக்கு மகா ருத்ர அபி?ஷகம் செய்து, அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. மாலையில் சோமவார (திங்கள் கிழமை) பிரதோஷத்தையொட்டி, ரிஷப வாகனத்தில் பெரியநாயகி உடனுறை கரபுரநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கலைச்செல்வி, அலுவலர் சேட்டு, பாலசுப்பிரமணிய ஈசான சிவாச்சாரியார் செய்திருந்தனர்.