சந்தனகுட உரூஸ் விழா: முஸ்லிம்கள் ஊர்வலம்
ADDED :2699 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், உரூஸ் திருவிழாவையொட்டி, சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள, சங்கல்தோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா, கடந்த, 24ல் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கிருஷ்ணகிரி கோட்டையில் இருந்து, பைதுல் மால் மாவட்ட தலைவர் நவாப் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட குதிரை சாரட் வண்டியில், சந்தனகுடம் ஏற்றி, யானை முன்னே நடக்க, நடமாடும் இன்னிசை குழுவினருடன் ஊர்வலம் புறப்பட்டது. பழையபேட்டை, காந்தி ரோடு, ரவுண்டானா, பழைய சப்ஜெயில் ரோடு, சேலம் ரோடு, பெங்களூரு ரோடு, லண்டன்பேட்டை வழியாக, சங்கல்தோப்பு தர்காவை, ஊர்வலம் சென்றடைந்தது. இதில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.