அழிவின் விளிம்பில் பழமையான கோவில்
உடுமலை: உடுமலை அருகே, 900 ஆண்டு பழமையான கோவில், பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது.அமராவதி ஆற்றின் கரையில், சோழர்கள் காலத்தில், 108 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உடுமலை, கடத்துார் அமராவதி ஆற்றின் கரையில், கொங்கு மண்டலத்தின் பெயரிலேயே, கொங்கவிடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.கொங்கு மண்டலத்தின் வரலாற்றை பறைசாற்றும் இக்கோவிலில், ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்த இக்கோவில், தற்போது பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகிறது.
திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:கொங்கு மண்டலத்தில், அதன் பெயரிலேயே, இறைவன் திருநாமத்தை தாங்கியுள்ள ஒரே கோவிலாக கொங்கு விடங்கீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, கி.பி.,1221ல், முதல் கல்வெட்டு உள்ளிட்ட 10 கல்வெட்டுக்கள், கொங்கு மண்டலத்தின் வரலாற்றை விளக்குவதாக உள்ளது. கொங்கு மண்டலத்தை சிறப்பாக ஆட்சி செய்த, வீரராசேந்திர சோழனின் கல்வெட்டுக்கள் அதிகளவு உள்ளன. கருவறை, அர்த்தமண்டபத்துடன் காணப்படும் இக்கோவில், பண்டைய தமிழர்களின் கட்டட கலைக்கும், தமிழர்களின் வானியல் அறிவையும், சமுதாய அமைப்பையும் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.
வீரராசேந்திரனின்,கி.பி.,1233ம் ஆண்டு கல்வெட்டில், அக்காலத்தில் ஏற்பட்ட வானியல் மற்றும் கிரக மாற்றங்கள் குறித்து அறிய முடிகிறது. அதே போல், கொங்கு பாண்டியர் காலத்தில், தென் கொங்கில் வசித்த ஒரு பிரிவினருக்கு, இரட்டை சங்கு ஊதும் உரிமை, முரசு ஒலித்துக்கொள்ளும் உரிமை, தாங்கள் புறப்பட வேண்டிய இடங்களுக்கு பாத காலணி கோர்த்துக்கொள்ளும் உரிமை, தாங்கள் வீடுகளுக்கு சாந்திட்டுக்கொள்ளும் உரிமை ஆகியன அளிக்கப்பட்ட செய்தி கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.இவ்வாறு, ரவிக்குமார் கூறினார். பராமரிப்பில்லாமல், கட்டுமானங்கள் அழிந்து வருகின்றன. பக்தர்கள், கொடையாளர்கள் முயற்சியால் தற்போது, ஒரு கால பூஜை நடந்து வருகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலை, பழமை மாறாமல் புதுப்பிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்சினி கூறுகையில், கோவில் புனரமைப்பு செய்வதற்காக, தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், புதுப்பிக்கப்படும்,என்றார்.