உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் புனித பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஜெருசலேம் புனித பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்: ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் செல்ல, கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. இதில், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கிய பயணம், ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம், 10 நாட்கள் வரை இருக்கும். இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி, 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இதற்கான உறுதிமொழியை கையொப்பமிட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு குடும்பத்தில், விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் நான்கு பேர் பயணம் மேற்கொள்ளலாம். இதில் இரண்டு வயது நிறைவடைந்த இரண்டு குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில், 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக ஒருவர், மேற்படி நிபந்தனைகளுடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.


பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கள்தொகையின் அடிப்படையில் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். இதற்காக விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், கட்டணமின்றி பெறலாம். இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அண்ணாசாலை, சென்னை 600 002 என்ற முகவரிக்கு, வரும் 6க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !