பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கம்பம் நடல்
பெரியகுளம், பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டுசாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு ஆனித்திருவிழா ஜூலை 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஜூலை 18 வரை பத்துநாட்கள் நடக்கும். இதற்காக கோயில் சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. வடகரை வரதப்பர்தெருவிலிருந்து கோயில் பூசாரி அருணாச்சலம் சக்திகரகம் எடுத்து வந்தார். வடகரையிலிருந்து, தென்கரை மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள், பூசாரிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். துரைப்பாண்டி, காமுத்துரைப்பாண்டி உட்பட பூசாரிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோயில் முன்புறம் மண்டபத்தில் கம்பம் நடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் அண்ணாதுரை , மண்டகப்படிதாரர்கள் செய்தனர்.