உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கடைகள் அகற்றம்

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கடைகள் அகற்றம்

ஈரோடு: கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்னை முடிவுக்கு வந்ததால், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன் போடப்பட்ட, தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோவில் முன்புறம், பல ஆண்டுகளாக, தேங்காய், பூ, விற்பனை செய்யும், 12 கடைகள் இருந்தன. கோவில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடத்தி, அதன் மூலம் கடைகள் நடத்திக் கொள்ள அனுமதிக்கிறது. இந்நிலையில், கடந்த அக்டோபரில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளில், தீ விபத்து ஏற்பட்டு, கோவில் பழமையான தூண்கள், பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இனி, கோவில்களின் உள் பகுதி, கோவில் மதில் சுவர், தேர், மற்றும் ஸ்தல விருட்சம் உள்ள இடங்களில், பூ முதல் எந்த கடைகளும், இருக்கக் கூடாது, தற்போதுள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்தில், 1,350 கோவில்கள் உள்ளன. கோவில் பாதுகாப்புக்காக, பல இடங்களில் இருந்து கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன்புறம் போடப்பட்டிருந்த, 12 கடைக்காரர்கள் மட்டும் அகற்ற மறுத்து அடம் பிடித்தனர். கோவில் நிர்வாகம் பல முறை எச்சரித்தும், கடைக்காரர்கள் கண்டு கொள்ளவில்லை. போலீஸ் பாதுகாப்புடன், கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடை வியாபாரிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போலீசார், நீதிமன்ற உத்தரவை மீறி, கடை நடத்த அனுமதிக்க முடியாது என, எச்சரித்தனர். இதையடுத்து, வியாபாரிகள் கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்வதாக எழுதி கொடுத்து விட்டு, நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கடைகளை அகற்றி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !