உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் கிருத்திகை விழா : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணியில் கிருத்திகை விழா : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவில், நேற்று நடந்த ஆனி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரைத் தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், அடுத்த மாதம், 5ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து, இரு நாட்கள், இரண்டாம் மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் திருத்தணி கோவிலில் குவிவர். இந்நிலையில், ஆடிக்கிருத்திகைக்கு முன் வரும், ஆனி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர் போன்ற பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, காவடிகளுடன் வந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர். lகாஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆனி கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !