ரிஷிவந்தியம் தேர்த் திருவிழா கூடுதல் பஸ் வசதி தேவை
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா இன்று நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் தேர்திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு நேரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 9ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
கூடுதல் பஸ் வசதி: ஆண்டுதோறும் தேர்திருவிழாவின் போது சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர். கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் பகுதிகளில் இருந்து ரிஷிவந்தியம் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால், ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் வாகனங்களில் ஆபத்தான முறையில், பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு சார்பில் கூடுதல் பஸ் வசதி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.