மடப்புரத்தில் ஆடிவெள்ளி அலைமோதிய பெண்கள் கூட்டம்
திருப்புவனம்: திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்று. இங்கு ஆடி வெள்ளிக்கிழமை பூஜையில் ஏராளமான பெண்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். நேற்று ஆடி இரண்டாவது வெள்ளி என்பதாலும் கிரகணத்தை முன்னிட்டு மாலை 5:00 மணியுடன் கோயில் நடை சாத்தப்படுவதால் காலையிலிருந்தே ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலில் சிரமப்படும் பக்தர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு, நடமாடு மருத்துவ குழு மருத்துவர் சங்கரலிங்கம் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கோயில்களில் விளக்கேற்ற தடை இருப்பதால் நெய் விளக்கு மேடை அகற்றப்பட்டு விட்டது. இதனால் பெண்கள் தரையில் விளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஆடி மாதம் காற்று வீசும் காலம் என்பதால் தரையில் விளக்கு ஏற்றும் போது விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அறநிலையத்துறை கோயில்களில் விளக்கேற்ற தனி இடம் ஒதுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சேது தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.