உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசுவாமி கோவில் நிலத்திற்கு ஆபத்து

கந்தசுவாமி கோவில் நிலத்திற்கு ஆபத்து

திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலுக்குரிய நிலங்கள், வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மோசடி பட்டா மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், திருப்போரூரில் அமைந்துள்ள, கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமாக, திருப்போரூர் பகுதி மட்டுமின்றி, மாவட்டத்தின் பல இடங்கள், சென்னையில் சொந்த இடம் உள்ளது. நிலங்கள் வெவ்வேறு பெயர்களில் அமைந்து, போலி ஆவணம் மூலம், தனியார் பெயருக்கு பட்டா மாற்றி மோசடி நடக்கிறது. அறநிலையத் துறை, அதன் நிர்வாகத்திற்கான பதிவில், இக்கோவிலை, கந்தசுவாமி கோவில் என குறிப்பிட்டு பதிந்து, நிர்வாக நடைமுறையில் உள்ளது.

நில மோசடி: பக்தர்களை பொருத்தவரை, கந்தசுவாமி மட்டுமின்றி, முருகர், சுப்பிரமணியர் என, வழக்கத்தில், பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். இங்கு வழிபட்டு, வேண்டுதல் நிறைவேறி, பக்தர்கள், மனை, நிலம், கட்டடம் ஆகியவற்றை, நீண்டகாலம் முன், கோவிலுக்கு தானம் வழங்கியுள்ளனர். பேச்சு வழக்கில் குறிப்பிடப்பட்ட, திருப்போரூர், சுப்பிரமணியசுவாமி; முருகப்பெருமான்; கந்தசாமி சேர்ந்த வள்ளியம்மை; வள்ளி தேவஸ்தானம் என, வெவ்வேறான பெயர்களில் பதிந்து, அவர்கள் தானம் அளித்துள்ளனர். இத்தகைய பெயர்களில், திருப்போரூர், செய்யூர் அடுத்த போந்துார், திண்டிவனம் அடுத்த ஓங்கூர்; செங்கல்பட்டு அடுத்த ஆத்துார்; தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம்; மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளில், நிலம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், நிலத்திற்கு மதிப்பின்றி, மோசடியும் நடக்கவில்லை. தற்கால நிலமதிப்பால், நிலமோசடிகள் அதிகரிக்கின்றன. இக்கோவிலின், திருப்போரூர், புல எண்: 239/1ன், 2.51 ஏக்கர் நிலம், தனியார் நிறுவனத்தால், போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டு, ஆய்விற்கு பின், தற்போது, தனியார் பெயரிலான பட்டா ரத்து செய்யப்பட்டது. இந்நிலம், வள்ளி தேவஸ்தானம் என்ற பெயரில் பதிவாகியுள்ளதே, மோசடியாக, தனியார் வளைக்க காரணமாக அமைந்தது.


ஆய்வு அவசியம்: சிட்லப்பாக்கம் நிலம், தனியாரால் வளைக்கப்பட்டு, கட்டடம் கட்ட முயன்ற நிலையில், இக்கோவில் நிர்வாகம் மீட்க முயன்றது. ஆக்கிரமிப்பாளரோ, நிலம், திருப்போரூர் சுப்பிரமணியசுவாமி பெயரில் உள்ள போது, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கும், நிலத்திற்கும் தொடர்பில்லை என கூறி, அதிகாரிகளை தடுத்துள்ளார். இதுபோல, பிற நிலங்களும் பறிபோகும் நிலை உள்ளது. திருப்போரூரை பொருத்தவரை, கந்தசுவாமி கோவில் மட்டுமே, ஒரே முருகர் கோவிலாக உள்ளது. எனவே, திருப்போரூர் என குறிப்பிட்டு, முருகரின் வெவ்வேறு பெயர்களில் நிலம் பதிந்திருப்பினும், அனைத்தும், கந்தசுவாமி கோவிலுக்கே உரியது. பழங்கால ஆவணங்களை ஆய்வு செய்தால், வேறு பகுதி களிலும், இவ்வாறு வெவ்வேறு பெயர்களில், நிலம் இருப்பது தெரிய வரும். பெயர் குழப்பத்தை பயன்படுத்தியே, பலரும், கோவில் நிலத்தை வளைக்க முயல்கின்றனர். இதை தவிர்த்து, கோவில் நிலத்தை பாதுகாக்க, வெவ்வேறு பெயர் பதிவை தவிர்த்து, அனைத்தையும், கந்தசுவாமி கோவில் பெயரில் பதிந்து, அதற்கான பட்டாவையும் பெற, கோவில் நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.


இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: வள்ளி தேவஸ்தானம் என்ற பெயரில் இருந்ததே, தனியார் பட்டா மோசடிக்கு காரணம். மற்ற இடங்களிலும், வெவ்வேறு பெயரில் நிலம் உள்ளது. அனைத்து பகுதி நிலத்தையும், கந்தசுவாமி கோவில் பெயருக்கு மாற்றவும், வருவாய்த்துறையில் பதியவும், துறை உயரதிகாரிகள், இதுதொடர்பாக, பெயர்மாற்ற அரசாணை வெளியிட்டால் தான், தீர்வு கிடைக்கும். இது குறித்து, ஏற்கனவே பரிந்துரைத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !