மலையாம்பட்டி கோவில் விழா: கிடாக்கள் வெட்டி சமபந்தி விருந்து
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, இரவில் ஆண்கள் மட்டுமே கொண்டாடிய திருவிழாவில், 175க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி, சமபந்தி விருந்து நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வடுகம் அடுத்த மலையாம்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பொங்கலாயி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில், கிடா வெட்டி பூஜை நடக்கும். இதில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்தாண்டு விழா, கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் உள்ள காளியம்மன், இண்டங்காட்டு கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு ஆட்டு கிடா வெட்டி, பொங்கல் வைத்து பூஜை நடந்தது. முதலில், மலை ஜாதி சமூகத்தைச் சேர்ந்த பூசாரி பொங்கல் வைத்து பூஜை செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், முதன் முதலாக பெண் ஆடு பலியிடப்பட்டது. அதன்பிறகு, கோவில் முன், ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. விழாவில், 175க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. அவை சமைக்கப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.
இதுகுறித்து, விழாக்குழுவினர் கூறியதாவது: திருவிழாவில், அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், ஆடுகளை பலியிட்டு வழிபடுவர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும்; குடும்ப பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை காலந்தொட்டு இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இந்த விழாவை நாங்கள் நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.