உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசிக்கு சோறு போடு

பசிக்கு சோறு போடு

ஒரு பிச்சைக்காரனை புத்தரின் சீடர் சந்தித்தார். அவனுக்கு தர்ம உபதேசம் செய்ய ஆரம்பித்தார். “ஆசையை விடு, ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்’ என்று நீண்ட சொற்பொழிவை அவனிடம் நிகழ்த்தினார். பிச்சைக்காரனுக்கோ கடும் பசி. இவர் சொல்வதெல்லாம் அவன் காதில் ஏறுமா என்ன...அவன் பாதி மயக்கத்தில், ஏதோ கவனத்தில் இருந்தான். சீடருக்கு கோபம் வந்து விட்டது. அங்கிருந்து நகர்ந்து விட்டார். புத்தரிடம் சென்று, “ஐயனே! நான் ஒரு பிச்சைக்காரனுக்கு நல்ல பல உபதேசங்களைச் செய்தேன். அவற்றை அவன் காதிலேயே வாங்கவில்லை. நான் கோபித்துக் கொண்டு வந்து விட்டேன்,” என்றார். புத்தர் சீடரிடம், “அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா,” என்றார். சீடனும் பிச்சைக்காரனை தேடி அழைத்து வந்தார். புத்தர் அவனது நிலையைப் பார்த்தார். பலநாட்களாய் சாப்பிடாததால் பஞ்சடைத்த கண்களையும், ஒட்டிய வயிறையும் பார்த்த அவர், அவ னுக்கு வயிறார  உணவளித்து அனுப்பி விட்டார். சிடர் அவரிடம், ‘அவனுக்கு உணவளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லை! ஏனோ!” என்று கேட்டார். “சீடனே! அவனுக்கு முதல் தேவை உணவு. அதைக் கொடுத்து விட்டேன். இனி அவன் உபதேசம் கேட்க வருவான் பார்..” என்றார். பசியுள்ளவனிடம் ஆன்மிகம் மட்டுமல்ல...எதைப் பற்றி பேசினாலும் புரியாது. இதனால் தான் அன்னதானத்திற்கு நம் முன்னோர்கள் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்...புரிகிறதா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !