உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை: 5,000 ஆடு, 10,000 கோழிகள் விற்பனை அமோகம்

சேலத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை: 5,000 ஆடு, 10,000 கோழிகள் விற்பனை அமோகம்

சேலம்: சேலத்தில், இன்று நடக்கும் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேர்த்திக்கடனுக்கு, 5,000 ஆடுகள், 10 ஆயிரம் கோழிகள் குவிக்கப்பட்டு, விற்பனை அமோகமாக நடக்கிறது.

சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் உள்பட, எட்டுப்பட்டி மாரியம்மன், மாநகரிலுள்ள, 88, மாவட்டத்திலுள்ள, 100க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களின் ஆடிப்பண்டிகையில், இன்று பொங்கல் விழா நடக்கிறது. அதற்காக, மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று, தர்மபுரி மாவட்டம் - அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி; சேலம் மாவட்டம் - ஓமலூர், எம்.செட்டிப்பட்டி, வாழப்பாடி, கருமந்துறை, தாரமங்கலம் ஆகிய இடங்களிலிருந்து, வியாபாரிகள், விவசாயிகள், ஆட்டு கிடாய்களை, சேலத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். மணியனூர் ஆட்டுச்சந்தையில் காலை, 1,000 கிடாய்கள் விற்பனையாகின. வர்த்தக நிறுவனங்கள், மில்களில், ரத்த காவு கொடுக்க, செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை, லீபஜார் பகுதிகளில், 4,000 கிடாய்களை, வியாபாரிகள் விற்பனைக்கு குவித்திருந்தனர். அவற்றை, செவ்வாய்ப்பேட்டை, லீபஜார் வியாபாரிகள், மில் அதிபர்கள் வாங்கினர். பண்டிகையால், அதன் விற்பனை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம், கிடாய்கள் உயிருடன் கிலோ, 300க்கு விற்றது, நேற்று, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், விலையை பொருட்படுத்தாமல், வியாபாரிகள், மக்கள் அதிகளவில் வாங்கினர். ஒரே நாளில், சேலத்தில், 5,000 கிடாய்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் - நாமகிரிப்பேட்டை; கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலிருந்து, 10 ஆயிரம் நாட்டு கோழி, சேவல்கள், திருச்சி பிரதான சாலை, தாதகாப்பட்டி கேட், அம்மாபேட்டை ஆகிய இடங்களில், விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம், நாட்டு கோழி உயிருடன் கிலோ, 340க்கு விற்ற நிலையில், பண்டிகையால் நேற்று, 380 முதல், 400 ரூபாய் வரை விற்பனையானது. நடுத்தர, ஏழைமக்கள், அவற்றை அதிகளவில் வாங்கினர். இன்று, மீன், பிராய்லர் கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !