உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு

பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு

பழநி: பழநியில் 14ம் நூற்றாண்டில் கேரளம் மற்றும் தமிழகத்தை ஆண்ட கொங்குசேர அரசர் காலத்தில் பயன்படுத்திய நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி. பழங்கால நாணயங்கள் சேகரிப்பாளர் சுகுமார்போஸ் என்பவர் வைத்திருந்த செம்பு நாணயம் ஒன்றை ஆய்வு செய்தார். அந்த நாணயம் கொங்குசேர மன்னர்கள் ஆட்சி செய்த 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத்தெரிய வந்துள்ளது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: செம்பு நாணயம் 3.200 கிராம் எடையுள்ளது. ஒழுங்கற்ற வட்டவடிவத்தில் முன்புறம் இடதுகோடியில் வில்லும், அடுத்து மான், யானை, பனைமரம் உள்ளன. இவை பண்டைய கொங்குசேர அரசின் முத்திரைகள். நாணயத்தின் பின்புறம் ஓரத்தில் மங்கல விளக்குகள், 9 வட்டப்புள்ளிகள் உள்ளன. கேரளாவின் சேரநாட்டையும், தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டவர்களை கொங்கு சேரர்கள் என அழைக்கப் பட்டனர்.தற்போது கிடைத்துள்ள நாணயத்தில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான நாணயத்தை காண்பது அரிது. இதுபோன்ற காரணங்களால், இந்த நாணயம் கி.பி.,14ம் நூற்றாண்டில் கொடுங்களூரை ஆட்சிசெய்த ரவிவர்ம குலசேகர பெருமாளின் நாணயமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !