சேலத்தில் வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு
சேலம்: வல்லப கணபதியாக, ராஜகணபதி காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தி விழா, சேலம், தேர்வீதியிலுள்ள, ராஜகணபதி கோவிலில், நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, 6:00 மணி முதல், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இளநீர், தயிர் உள்ளிட்ட திரவியங்களால், அபி ?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, வல்லப கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், அருகம்புல், எருக்கமாலை வைத்து, சுவாமியை வழிபட்டனர். சிலர், சுண்டல், பொங்கலை, பக்தர்களுக்கு வழங்கினர்.
ரூபாய் நோட்டில்...: ஓமலூர் அருகே, பண்ணப்பட்டி பிரிவில், விநாயகர் நண்பர்கள் குழு சார்பில், 11ம் ஆண்டாக, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகின்றனர். அங்கு, யானை மீது நின்று, கையில் சக்கரத்தை ஏந்தியபடி, விநாயகர் உள்ளார். 10, 20, 50 ரூபாய் நோட்டுகளால், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாலை அணிவித்து பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை, அன்னதானம் நடந்தது. இன்று காலை, ஊர்வலமாகச் சென்று, மேட்டூர், காவிரியில் கரைக்கவுள்ளனர்.
சந்தன காப்பு: ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 அடி உயரத்தில், ராஜ அலங்கார சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. நேற்று, மூலவர் விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ராணிப்பேட்டை நண்பர்கள் குழு மற்றும் அ.ம.மு.க., சார்பில், மதியம், கோவில் முன்புற பகுதியில், 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், ஆத்தூர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஆத்தூர், வெள்ளை விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, சிவகலா ?ஷத்ரா நாட்டியப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
192 சிலைகள் கரைப்பு: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று, விநாயகர் சிலைகளை, மினி ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம், கல்வடங்கம் காவிரியாற்றுக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, பூஜை செய்து, சிலைகளை ஆற்றில் கரைத்தனர். நேற்று மாலை, 6:00 மணி வரை, கல்வடங்கம் ஆற்றில், 90 சிலைகள், பூலாம்பட்டி ஆற்றில், 102 சிலைகள் கரைக்கப்பட்டன. அசம்பாவிதத்தை தடுக்க, பல இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி, போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.