உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் குடியாத்தத்தில், பள்ளத்தில் உள்ள அம்மன் கோவிலை 5 அடி உயர்த்தும் பணி

வேலூர் குடியாத்தத்தில், பள்ளத்தில் உள்ள அம்மன் கோவிலை 5 அடி உயர்த்தும் பணி

வேலூர்: குடியாத்தத்தில், பள்ளத்தில் உள்ள அம்மன் கோவிலை, 5 அடி உயர்த்தி, 15 அடி தூரம் நகர்த்தும் பணிகள் நடக்கின்றன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாழையாத்தம் பஜார், வரதராஜ தெருவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 16 அடி அகலம், 37 அடி நீளம் கொண்ட இக்கோவில், பருவதராஜ குல மரபினருக்குச் சொந்தமானது. இக்கோவில் அமைந்துள்ள பகுதியில், சாலை செப்பனிடும் பணி நடந்ததால், கோவில், தரைமட்டத்தை விட பள்ளத்துக்கு போனது. மழைக் காலங்களில் கோவிலில் நீர் தேங்கி, பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே, கோவிலுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல், பின்புறம், 15 அடி நகர்த்தவும், உயரத்தை, 5 அடி அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்பணியை, ஹரியானாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் துவங்கியது.கோவிலின் அடிப்புறத்தைச் சுற்றி பள்ளம் தோண்டி, 500க்கும் மேற்பட்ட ஜாக்கிகளை பொருத்தி, ஜாக்கிகளுக்கும், கோவில் அடித்தளத்துக்கும் இடையே கான்கிரீட் தளம் அமைத்தனர். இதையடுத்து, நேற்று 14ல், கோவிலை பின்னோக்கி நகர்த்தி, உயரத்தை அதிகரிக்கும் பணி துவங்கியது.ஆகம விதிப்படி, கோவிலை புனரமைத்து, வரும் கார்த்திகையில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !