திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், சதுர்த்தி விழாவை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்க, ஏழு இடங்களை பயன்படுத்தலாம் என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, இந்து முன்னணி சார்பில், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும், பல்வேறு இந்து அமைப்பினர் நடத்தும் விழாவை தொடர்ந்து, சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
திருப்பூர் நகர சுற்றுப்பகுதியில் வைக்கப்படும் சிலைகள், தாராபுரம் ரோடு, ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் கரைக்கப்படுவது வழக்கம். கடந்த, மூன்று ஆண்டுகளாக மழை இல்லை என்பதால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே, சாமளாபுரம் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட அளவில், ஏழு இடங்களில் சிலைகளை கரைக்கலாம் என, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் தெற்கில், நொய்யல் ஆறு, பல்லடம் தாலுகாவில், சாமளாபுரம் குளம், ஆண்டி பாளையம் பி.ஏ.பி., வாய்க்கால், மடத்துக்குளத்தில் அமராவதி ஆறு, உடுமலையில், கெடிமேடு பி.ஏ.பி., வாய்க்கால், தாராபுரத்தில், உப்பாறு, உடுமலை தாலுகா, எஸ்.வி., புரம் பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய ஏழு இடங்களில், சிலைகளை கரைக்கலாம் என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், அங்கு சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படும். தண்ணீர் நிறுத்தப்பட்டால், சாமளாபுரம் குளத்தில் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.