உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் இந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம்

தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் இந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரத்தை, இந்துக்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும், மொகரம் திருநாள் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்காக, மொகரம் பண்டிகைக்கு, பத்து நாள் முன், விரதம் இருந்து, அல்லா என்றழைக்கப்படும் உள்ளங்கை உருவத்தை வெளியே எடுத்து வைத்து, அதற்கு தினமும் பூஜை செய்கின்றனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் (செப்., 20ல்) இரவு, ஊரின் மையத்தில் உள்ள மசூதி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பின், நள்ளிரவு தொடங்கி, அல்லா என்றழைக்கப்படும், உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, பெண்கள், அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின், நேற்று  (செப்., 21ல்) காலை, அல்லா மசூதி முன் தீ மிதி நடந்தது. இதில் ஏராளமானோர் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற கோரி, தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர்.

இதே போல், கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்திலும் நேற்று முன்தினம் (செப்., 20ல்) அல்லா விழா தொடங்கியது. பின், நேற்று (செப்., 21ல்) காலை, தீ மிதியில் ஏராளமான பக்தர்கள், தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !